இறைவனின் அனுமதிக்கு பின்னரே ஷஃபாஅத்

بسم الله الرحمان الرحيم 

முந்தைய பதிவிற்கான லிங்க்...

ஷஃபாஅத்


இறைவனின் அனுமதிக்கு பின்னரே ஷஃபாஅத்

சூரா அஸ்ஸுமர் வசனம் 44

قُل لِّلَّهِ الشَّفَاعَةُ جَمِيعًا ۖ لَّهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ

“பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!


சூரா அத்தாஹா வசனம் 109

يَوْمَئِذٍ لَّا تَنفَعُ الشَّفَاعَةُ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَرَضِيَ لَهُ قَوْلًا

அந்நாளில் அளவற்ற அருளாளன் யாருக்கு அனுமதியளித்து அவரது சொல்லையும் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர எவரது பரிந்துரையும் பயனளிக்காது.


ஹதீஸ்:

அறிவிப்பாளர் அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

இறைநம்பிக்கையாளர்கள் கண் சிமிட்டும் நேரத்தில் மின்னல், காற்று, பறவை, உயர் ரகக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் ஆகியவற்றைப் போன்று (விரைவாக அந்தப் பாலத்தைக்) கடந்துவிடுவார்கள். (அப்போது அவர்கள் மூன்று வகையினராக இருப்பார்கள்:) அவர்களில் பாதுகாப்பாகத் தப்பித்துக்கொள்வோரும் உண்டு. கீறிக் காயப்படுத்தப்பட்டுத் தப்புவோரும் உண்டு. பின்புறத்திலிருந்து தள்ளப்பட்டு நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் இறைநம்பிக்கையாளர்கள் (அந்தப் பாலத்தைக் கடந்து) நரக நெருப்பிலிருந்து தப்பிவிடுவார்கள்.

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! மறுமை நாளில் நரகத்தில் கிடக்கும் தம் சகோதரர்களின் நன்மையை வலியுறுத்தி இறைவனிடம் மிகவும் மன்றாடி வேண்டுபவர்கள் இறை நம்பிக்கையாளர்களைவிட வேறெவருமில்லை. அவர்கள் (பின்வருமாறு) கூறுவார்கள்: எங்கள் இறைவா! இவர்கள் எங்களுடன்தான் நோன்பு நோற்றார்கள்; தொழுதார்கள்; ஹஜ் செய்தார்கள் (எனவே இவர்களை நீ நரகத்திலிருந்து விடுதலை செய்வாயாக!). அப்போது அவர்களிடம், “நீங்கள் (சென்று) உங்களுக்குத் தெரிந்தவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்” என்று கூறப்படும். மேலும், (நரகத்திலுள்ள அவர்களை இவர்கள் அடையாளம் காண்பதற்கு வசதியாக) அவர்களது உடலைத் தீண்டக் கூடாதென நரகத்திற்குத் தடை விதிக்கப்படும். உடனே அவர்கள் (நரகத்திற்குச் சென்று) ஏராளமான மக்களை வெளியே கொண்டுவருவார்கள். அப்போது (நரகத்தில் இருந்த) அவர்களில் சிலருடைய கணைக்கால்களில் பாதிவரையும், (இன்னும் சிலருடைய) முழங்கால்கள்வரையும் நரக நெருப்பு தீண்டியிருக்கும். பிறகு, “எங்கள் இறைவா! நீ யாரை வெளியேற்றுமாறு கூறினாயோ அவர்களில் ஒருவர்கூட நரகத்தில் எஞ்சவில்லை (எல்லாரையும் நாங்கள் வெளியேற்றிவிட்டோம்)” என்று கூறுவார்கள்.

அப்போது இறைவன் “நீங்கள் திரும்பிச் சென்று எவரது உள்ளத்தில் ஒரு பொற்காசு அளவு நன்மை இருக்கிறதோ அவரை வெளியேற்றுங்கள்” என்று கூறுவான். அவ்வாறே அவர்களும் (இன்னும்) ஏராளமான மக்களை வெளியேற்றிவிட்டு (வந்து), “எங்கள் இறைவா! நீ உத்தரவிட்ட யாரையும் அதில் நாங்கள் விட்டு வைக்கவில்லை (எல்லாரையும் வெளியேற்றி விட்டோம்)” என்று கூறுவார்கள். பிறகு இறைவன், “நீங்கள் திரும்பிச்சென்று எவரது உள்ளத்தில் அரைப் பொற்காசு அளவு நன்மை இருக்கிறதோ அவரையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றிவிடுங்கள்” என்பான். அவர்களும் ஏராளமான மக்களை வெளியே கொண்டு வருவார்கள். பின்னர் “எங்கள் இறைவா, நீ கட்டளையிட்ட ஒருவரையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை” என்று கூறுவார்கள். பின்பும் இறைவன் “நீங்கள் திரும்பிச்சென்று எவரது உள்ளத்தில் அணுவளவு நன்மை இருக்கிறதோ அவரை வெளியேற்றுங்கள்” என்பான். அவ்வாறே அவர்கள் (சென்று) அதிகமான மக்களை வெளியேற்றிவிட்டு (வந்து), “எங்கள் இறைவா! நரகத்தில் எந்த நன்மையையும் நாங்கள் விட்டுவைக்கவில்லை” என்று கூறுவார்கள்.

முஸ்லிம் 302

Post a Comment

0 Comments